தமிழ்நாடு

மகிழ்ச்சியை மறந்து பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் - இனியாவது மாறுமா? மாற்றுவோமா‌?

மகிழ்ச்சியை மறந்து பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் - இனியாவது மாறுமா? மாற்றுவோமா‌?

webteam

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ‘தூய்மை இந்தியா’ என்னும் இலக்கை நோக்கி செல்லும் நாம், அதன் விதிமுறைகளை நடைமுறை படுத்தாதது தான் அவர்களும் நம்மைப் போல் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு தடையாக நிற்கிறது.

ஊரே பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தூய்மை பணியாளர்கள் தங்களது கடமையில் தவறாது பணி செய்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 'சுத்தம் சோறு போடும்' என்பது முதுமொழி. தற்போதைய மத்திய மாநில அரசாங்கம் தூய்மை இந்தியா எனும் வாசகத்தை முன்னிறுத்தி பல்வேறு சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முதுகெலும்பாக திகழ்பவர்கள் தூய்மை பணியாளர்களே. கிராமம் நகரம் என அனைத்தின் சுகாதாரத்திலும் இவர்களது பங்கு அளப்பரியது.

சில மணிநேரம் சாலையில் குப்பை கழிவுகள் காணப்பட்டாலே இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் இதுகுறித்த பல்வேறு விமர்சனங்கள் வலைதளங்களில் இவர்களில் இருந்து ஆரம்பித்து நிர்வாகம் வரை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிறது. ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கண்டு சற்றும் மனம் தளராமல் மக்களின் சுகாதார நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பண்டிகை நாளன்று கூட தங்களது குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழாமல் பணிகளில் துரித கவனம் செலுத்திவரும் நிகழ்வு நெகழ்ச்சியை அளிக்கிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள டிவிஷன் பகுதிகளில் அவர்களோடு இணைந்து மாமன்ற உறுப்பினர்கள் பொங்கல் கொண்டாடினர். மேலும் அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தனர். சிறிது நேரமே கொண்டாடிவிட்டு மீண்டும் வழக்கம் போல் தங்கள் பணிகளுக்குச் சென்றனர்.

இனிவரும் காலங்களிலாவது அவர்களது பணி சுமையை குறைக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றி அதனை செயல்படுத்தும் நிலையில் ’தூய்மை பாரதம்’ என்ற இலக்கு மட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களின் நிலையையும் மாற்றுவோமாக!