சென்னையில் தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கி 6-ஆம் வகுப்பு மாணவன் இறந்துபோன சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை எழும்பூர் பி.சி.ஓ சாலையில் வசித்து வருபவர் அப்துல் ஹாதி. இவரது பேரன் முகமது தெக்கி (12). தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். தெக்கியின் தந்தை அகமத் துபாயில் பணி புரிந்து வரும் நிலையில், தன் தாத்தா மற்றும் தாயுடன் தெக்கி வசித்து வந்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடியுள்ளதால் தெக்கி, வீட்டிலேயே விளையாடி வந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி இரவு தெக்கி வீட்டில் உள்ள தொட்டிலில் விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தொட்டிலின் கயிறு தெக்கியின் கழுத்தை இறுக்கி உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுவன் மயங்கி விழுந்துள்ளான்
இதனை கண்ட அவரது தாய் உடனே தெக்கியை சிகிச்சைக்காக எழும்பூர் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேத்துபட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21ஆம் தேதி சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் தெக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தெக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.