தமிழ்நாடு

12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ: மதிப்பெண் வழங்கியதில் பாரபட்சமா? - பெற்றோர் முற்றுகை போராட்டம்

kaleelrahman

கிழக்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண் வழங்கியதில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளம் மூலமாகவோ அல்லது சம்மந்தப்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியிலோ அவர்களுக்கான மதிப்பெண்களை தெரிந்தது கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் தலா 30 சதவீதமும், 12-ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீமும் கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் உள்ள சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாகவும், அயனம்பாக்கம் சி.பி.எஸ்.இ. பள்ளி கிளை மாணவர்களுக்கு அதிகமான மதிப்பெண்களும் வழங்கியிருப்பதாகவும் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று முகப்பேரில் உள்ள அந்த கிளை பள்ளியின் முன்பு ஏராளமான பெற்றோர் கூடினார்கள். அவர்கள் பள்ளி வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், முகப்பேர் கிளையில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு மிக குறைவான மதிப்பெண் வழங்கப்படிருப்பதாகவும், ஆனால், அயனம்பாக்கம் பள்ளி கிளையில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பள்ளி நிர்வாகமோ, நாங்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றியே மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கியிருப்பதாக தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளிக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.