தமிழ்நாடு

ஏரியில் வண்டல் மண் எடுப்பதில் இரு கிராமங்களிடையே மோதல்: 20 பேர் காயம்

ஏரியில் வண்டல் மண் எடுப்பதில் இரு கிராமங்களிடையே மோதல்: 20 பேர் காயம்

webteam

அரியலூரில் வண்டல் மண் எடுப்பதில் இருகிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 

அரியலூர் மாவட்டம் மேலூர் தத்தனூர் கிராமத்தில் பொன்னப்பன் என்ற ஏரி உள்ளது. அந்த ஏரியில் வண்டல் மண் எடுக்க கைகளத்தூர் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதனால், மேலூர் தத்தனூர் மக்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மண் எடுக்க வந்த கைகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் மேலூர் தத்தனூரைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கைகளத்தூரைச் சேர்ந்த முருகன் என்பவர் தகாத முறையில் பெண்களிடம் பேசியதால் இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மண் எடுக்க வந்த பொக்லைன் இயந்திரங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கலைந்து செல்ல அறிவுறுத்தியும், இரு கிராம மக்களும் தீவிரமாக மோதிக்கொண்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதல் தொடர்பாக முருகன் உட்பட 2 கிராமங்களைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.