எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை pt web
தமிழ்நாடு

அதிமுக vs பாஜக | முற்றும் வார்த்தை மோதல்... “நம்பிக்கை துரோகி என்றால் அது EPS-தான்” - அண்ணாமலை

PT WEB

“எல்லாம் மாயத்தோற்றம்”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான வார்த்தைப் போர் முற்றியுள்ளது. இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டாக முன்வைத்த கருத்துக்கள் அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி “அண்ணாமலை மெத்தப்படித்தவர். மிகப்பெரிய அரசியல் ஞானி. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வருகிறது. அதில் அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர் சுமார் 6800 வாக்குகள்தான் குறைவாகப் பெற்றுள்ளார்.

ஏதோ அண்ணாமலை வந்தபின்தான் பாஜக தமிழகத்தில் வளர்ந்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் பெற்ற வாக்குகள் 18.80%. தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி பெற்ற வாக்குகள் 18.28%. ஆக 0.52% குறைவாகத்தான் வாக்குகளைப் பெற்றுள்ளனர்” என தெரிவித்திருந்தார்.

“எடப்பாடி பழனிசாமி துரோகி”

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நம்பிக்கை துரோகி எனும் பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குத்தான். பிரதமர் அவரை அழைத்துச் சென்று டெல்லியில் அருகிலேயே உட்கார வைப்பார். ஆனால் இங்கு சுயலாபத்திற்காக, இக்கரையை விட அக்கரை பச்சை என நினைத்துக்கொண்டு, பாஜக வேண்டாம் என ஒதுங்கியவர் யார்? எடப்பாடி பழனிசாமிதான்.

இதற்கு மக்கள் என்ன பாடம் புகட்டினார்கள் என்றால், பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தார்கள். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு பெரிய, நம்பர் 2 கட்சி பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. காரணம் அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும், தலைவர்கள் சரியில்லை. அந்த ஒரு காரணத்திற்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். கோவைக்கு நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு 134 வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். அவற்றையெல்லாம் அவர் எப்போது நிறைவேற்றுவார்?

“புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் வித்தகர்”

‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது; விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலின் போதும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கும். அப்போதும், எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணித்துவிட்டு ஒதுங்கி இருப்பாரா?

முதலில் சட்டம் ஒழுங்கு என சொன்னார். ஆனால் இப்போது ஈரோடு இடைத்தேர்தலில் குளறுபடி நடந்தது, அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். புதுப்புது காரணங்களை தினமும் கண்டுபிடித்து சொல்லும் வித்தகராக எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இல்லை” என தெரிவித்துள்ளார்.