தாக்குதலில் முடிந்த வாக்குவாதம் புதியதலைமுறை
தமிழ்நாடு

குன்றத்தூர் | நடத்துநரை கட்டையால் அடித்த மேலாளர்.. மேனேஜரை இரும்பு ராடால் அடித்த நடத்துநர்!

குன்றத்தூர் - ஒரே ஒரு நாள் விடுப்பு எடுத்த பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேருந்து பணிமனை உதவி கிளை மேலாளர்... கட்டை மற்றும் இரும்பு ராடை கொண்டு சரமாரியாக தாக்கிக்கொண்ட அதிர்ச்சி வீடியோ வெளியானது.

PT WEB

செய்தியாளர் - நவீன்குமார்

காஞ்சிபுரம் குன்றத்தூரை அடுத்த வழுதலம்பேடு பகுதியில் அரசு பணிமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் பிராட்வே, தி.நகர், ஸ்ரீபெரும்புதூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனையில் உதவி கிளை மேலாளராக பணிபுரிந்து வருபவர் பரதன்(60). தொ.மு.ச தொழிற் சங்கத்தை சேர்ந்த இவர், இந்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குன்றத்தூரில் இருந்து திருப்போரூர் வரை இயக்கப்படும் அரசு பேருந்து தடம் எண் 566ல் பனிபுரியும் நடத்துநர் ராஜசேகர்(45). அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த இவர் நேற்று வேலைக்கு வராததால் அவரை பரதன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குன்றத்தூர் பணிமனைக்கு சென்ற ராஜசேகர், உதவி கிளை மேலாளர் பரதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது தாயார் ஐசியூவில் இருப்பதாக ராஜசேகர் கூறிய நிலையில், அதற்கென்ன என்று எதிர் கேள்வி கேட்டுள்ளார் பரதன். அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

கட்டையை எடுத்த பரதன் ராஜசேகரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து விரட்டி விரட்டி பரதனை அடித்தார். இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து பரதன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

அவரை விடாமல் ராஜசேகர் விரட்டி சென்றார். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் ராஜசேகர் கையிலிருந்து இரும்புராடை பிடுங்கி வைத்துக்கொண்டு இருவரையும் தடுத்து நிறுத்தினர். அரசு பேருந்து நடத்துநர், பணிமனை உதவி கிளை மேலாளரை தாக்குவதற்கு ஓடுவதும் இருவரும் மாறி, மாறி தாக்கிக்கொள்ளும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.