மதுரையில் அமைச்சர் மூர்த்திக்கும், எம். பி. சு.வெங்கடேசனுக்கும் இடையில் கருத்து மோதல் முற்றி வருகிறது. என்ன நடந்தது?, மோதல் போக்கின் பின்னணி என்ன?.. விரிவாக பார்க்கலாம்...
மதுரையில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே மோதல் போக்கு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விஷயத்தில் அமைச்சர் மூர்த்திக்கும், எம்.பி சு. வெங்கடேசனுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது.
அமைச்சரின் தொகுதியில் எம்பிக்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இந்த சூழலில், சமீபத்தில் பெய்த கனமழையால் மதுரை பாதிக்கப்பட்ட நிலையில், “வரும் காலத்தில் மழை பாதிப்புகளை சரி செய்ய கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” என புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியின்போது சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார்.
ஆனால், போதிய அதிகாரிகள் இருப்பதாக விளக்கம் அளித்தார் அமைச்சர் மூர்த்தி. இந்நிலையில், மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மூர்த்தி, “எங்கே பாதிப்பு ஏற்பட்டது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை எம்.பி.யே சொல்லட்டும்” என்றார். அமைச்சர் மூர்த்தியின் இந்த பதில், எம்.பி. உடனான மோதல் போக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.