கும்பகோணம் மேயர் சரவணன் x
தமிழ்நாடு

ரெஸ்ட்ரூம் போனாகூட சொல்லனுமா? காங்கிரஸ் மேயருக்கு எழுந்த சிக்கல்! என்ன நடக்கிறது கும்பகோணத்தில்?

திமுகவினருக்கும் கும்பகோணம் மேயருக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், கூட்டத்தில் இருதரப்பிற்கும் காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்தது பிரச்னையை அதிகப்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - விவேக் ராஜ்

நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற கும்பகோணம் மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் சரவணனுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் மோதல் வெடித்திருப்பது தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. ஏற்கெனவே கோவை, நெல்லை மேயர் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் மேயரான சரவணனுக்கும் எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர்...

என்ன நடக்கிறது அங்கே? விரிவாகப் பார்ப்போம்..

கும்பகோணம் மேயர் சரவணுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் திமுகவினர்..

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளிலும் வெற்றிவாகை சூடியது தி.மு.க கூட்டணி. அதில், 20 மாநகராட்சிகளில் திமுகவினர்தான் மேயர்களாக இருக்கின்றனர். கோவை, நெல்லை மேயர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய மேயர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதுஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு கும்பகோணத்தை ஒதுக்கியது திமுக தலைமை.

அந்தவகையில், காங்கிரஸைச் சேர்ந்த சரவணன் மேயராகப் பதவியேற்றார். மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர்தான். காங்கிரஸ் கட்சியைச் சேந்த இருவர்தான் கவுன்சிலர்களாக வெற்றிபெற்றனர். ஆனால், மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்க, திமுகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. அது நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.

கும்பகோணம் மேயர் சரவணன்

மாமன்றக் கூட்டத்தை மேயர் சரியாக நடத்துவதில்லை. தீர்மானங்களை கிடப்பில் போடுகிறார். தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்தாமல் இருக்கிறார். கமிஷன் வாங்குவதிலேயே அக்கறை காட்டுகிறார், ஆளும் கட்சியான திமுகவை விமர்சிக்கிறார்’’ என சரவணன் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழத் தொடங்கின.

மறுபுறம், மேயர் சரவணனுக்கு திமுக துணை மேயர் தமிழழகன் மற்றும் கவுன்சிலர்கள் மரியாதை தருவதில்லை என அவரின் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நடந்த மாமன்றக் கூட்டத்திலும் மோதல் வெடித்துள்ளது.

பணி செய்யவிடாமல் திமுகவினர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு..

கூட்டத்தில் பேசிய மேயர் சரவணன், “அதிகாரிகள் தன்னுடன் ஆய்விற்கு வருவதில்லை. அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர் சிலர். அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக உறுப்பினர்கள் மீது முன்வைத்தார்‌.

அதற்கு பதில் அளித்த துணை மேயர் தமிழழகன், “மேயர் நிர்வாகத்தோடு ஒத்துப் போகாமல் இருந்தால் இது போன்ற சங்கடங்கள் வரத்தான் செய்யும். இதேவேறொரு மாமன்றமாக இருந்தால் பல்வேறு பிரச்னைகள் வந்திருக்கும். இது எல்லாம் தாண்டி உங்களை மதிக்கிறோம். எங்களுடைய முதல்வர் எங்களுக்கு கட்டளையிட்டதால் சகித்துக் கொண்டிருக்கிறோம்” என கூறினார்.

கும்பகோணம் மாநகராட்சி

தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் சாகுல் ஹமீது, ``தலைமை சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருப்போம் என நினைக்க வேண்டாம், ஓரளவிற்குதான் தலைமைக்கு கட்டுப்படுவோம்’’ என எச்சரிக்கும் விதமாக பேசினார். அதன் தொடர்ச்சியாக பேசிய கூட்டணி கட்சி பெண் கவுன்சிலர் , ``இப்படிப்பட்ட மேயர் நமக்கு தேவையா?’’ என கூறிவிட்டு அமர்ந்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தீர்மானங்களை நிறைவேற்றாமல் கூட்டம் முடிந்து விட்டதாக கூறி மேயர் புறப்பட்டு சென்றதால் திமுக உறுப்பினர் மேயருக்கு எதிராக கூச்சலிட்டனர்.

ரெஸ்ட் ரூம் போனா கூட சொல்லிட்டுதான் போகணுமா..

தவிர, கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் கடந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது திமுக உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மேயர் சரவணன் திடீரென எழுந்து தன்னுடைய அறைக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் மன்றத்தை அவமதித்துவிட்டு மேயர் செல்வதாக குற்றம்சாட்டி கூச்சலிட்டனர்.

சிறிது நேரத்தில் மீண்டும் மாமன்ற கூட்டத்திற்கு வந்த மேயரிடம், திமுக உறுப்பினர் சாகுல் ஹமீது, “வாக்காளர்கள் எங்களுக்கு ஓட்டு போட்டு இங்கு அனுப்பி உள்ளனர். ஆனால் எங்களை மதிக்காமல் எழுந்து சென்றால் என்ன அர்த்தம்? தலைமை சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருப்போம் என நினைக்க வேண்டாம், ஓரளவிற்குதான் தலைமை சொல்லுக்கு கட்டுப்படுவோம்” என காட்டமாக பேசினார்.

கும்பகோணம் மேயர் சரவணன்

அப்போது பேசிய மேயர், ``லூசுத்தனமாக பேச வேண்டாம், பள்ளி குழந்தைகள் மாதிரி ரெஸ்ட் ரூம் சென்று வருகிறேன் என சொல்லிவிட்டா போக முடியும்?’’ என கூறிவிட்டு, கூட்டத்தை முடித்துக் கொள்வதாக எழுந்து சென்றார். இதனால் மேயருக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு உருவானது.

ஏற்கனவே, ஆளும் கட்சி மேயர்கள் இருவர் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், தற்போது கூட்டணிக் கட்சி மேயருக்கு எதிராகவும் திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது திமுக தலைமைக்கு நெருக்கடியை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.