திண்டுக்கல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திண்டுக்கல் | காங்கிரஸ் - பாஜக இடையே மோதல்... முழு விவரம்!

திண்டுக்கல்லில் பிரதமரை அவதூறாகப் பேசிய மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவரை கைதுசெய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB

திண்டுக்கல்லில், “பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து அவமரியாதையாகப் பேசுவதுடன், சமூக வலைதளங்களில் இழிவாகப் பதிவுசெய்து வரும் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டனை கைதுசெய்க” என்று வலியுறுத்தி அப்பகுதி பாஜகவினர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திண்டுக்கல்

அதன்பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர், துரை மணிகண்டன் மீது கலவரத்தை தூண்டும் விதமாகவும் பொது வாழ்க்கையில் உள்ளவரை தரக் குறைவாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாகவும் கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

எனினும், அவரைக் கைது செய்யாததைக் கண்டித்து, இன்று மாலை எம்ஜிஆர் சிலை அருகே திண்டுக்கல் பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடக் குவிந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தடையை மீறிய 5 பேர் காங்கிரஸ் அலுவலகம் மீது கல்வீசித் தாக்கினர். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்திய நபரை பிடித்து அடிக்க முற்பட்டனர். அப்போது போலீசார் அவரை கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, கல்வீசிய பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைதுசெய்தனர்.