இறந்த மாணாவர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ரூட்டு தல விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

கடந்த வாரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் சிகிச்சை பெற்றுவந்த மாநிலக் கல்லூரி மாணவன் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளார்: ஜெ.அன்பரசன்

"ரூட்டு தல" விவகாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பிரசிடென்சி கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கொலை முயற்சி வழக்கில் கைது செய்து ஐந்து மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சுந்தர் (19). சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ பொலிடிகல் சயின்ஸ் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி கல்லூரி வகுப்பை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சரியாக மதியம் 2.50 மணி அளவில் மாணவர் சுந்தர் புறநகர் ரயில் நிலைய வாசலில் உள்ள கனரா பேங்க் ஏடிஎம் அருகே நடந்து சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் மாணவர் சுந்தரை சரமாரியாக தாக்கியது.

மேலும், அவரின் தலையை இழுத்து வேகமாக முட்டியதில் சுந்தர் சம்பவ இடத்திலேயே காதில் ரத்தம் வந்த நிலையில் மயக்கம் அடைந்தார். உடனடியாக அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் போலீசார் சேர்த்தனர்.

அதேசமயம் பாதுகாப்பு பணி போலீசார் பிடிப்பதற்குள் ஐந்து நபர்களும் தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரசிடென்சி கல்லூரி மாணவரான சுந்தரை தாக்கியது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

சிசிடிவி காசிகள் அடிப்படையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான மூன்றாம் ஆண்டு பி.ஏ ஹிஸ்டரி படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் தங்கனூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு (20), பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் பெருமந்தூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (20), பச்சையப்பன் கல்லூரியில் வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர்(19), பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் ஈகாடு பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் (20), பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கமலேஸ்வரன் (19) ஆகிய ஐந்து நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலுக்குள்ளான பிரெசிடென்சி கல்லூரி மாணவரான சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவரான சந்துரு என்பவரை இதற்கு முன்பு தனது நண்பர்களோடு சென்று தாக்கியதாகவும் அதற்கு பழி தீர்க்க சுந்தரை தனது நண்பர்களோடு வந்து சந்துரு தாக்கியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான ஐந்து நபர்கள் மீதும் கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரிய மேடு போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த பிரசிடென்சி கல்லூரி மாணவரான சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதனையடுத்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஐந்து மாணவர்களையும் கைது செய்து ஏற்கெனவே சிறையில் அடைத்த போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று(08-10-24) ரயில் நிலையத்தில் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி கர்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் "ரூட்டு தல" பிரச்னையால் தாக்கி கொள்வதாகவும், தொடர்ச்சியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். சுந்தர் என்ற மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறினர்.

ரூட்டு தல பிரச்சனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய புதிய சட்டத்தில் வீடியோ பதிவு ஆதாரங்களே போதுமானது எனவும் அதற்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை சுந்தர்உயிரிழந்த சம்பவமானது மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.