சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வைகோ, திருமாவளவன், அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்ற பின்னர், பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பாஜகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரின் மண்டை உடைந்தது. மோதலை தடுக்கச் சென்ற இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். அம்பேத்கர் சிலை அருகே கட்சிக் கொடியை நடுவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு, மேற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, இரு கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தார். முன்னதாக மோதல் சம்பவத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ஒரே நேரத்தில் பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வந்ததால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.