periyakulam police station Twitter
தமிழ்நாடு

தேனி: அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் மோதல்; கல் எரிந்து தாக்கிய இரு பிரிவினரால் பரபரப்பு!

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த காவல்துறையினர் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

PT WEB

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த முழு திருவுருவ வெண்கல சிலைக்கு அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை முதல் கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணி அளவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பகுதி மக்களும் T. கள்ளிப்பட்டியைச் பகுதியை சேர்ந்த மக்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வந்தபோது யார் முந்தி மரியாதை செலுத்துவது என இரு பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோதலை தடுப்பதற்காக தடியடி செய்ய முற்பட்டதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினர் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்தியதோடு தொடர்ந்து கற்களை எரிந்து கொண்டே 100 மீட்டர் தொலைவில் இருந்த காவல் நிலையம் புகுந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ், ஆய்வாளர் வாகனம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு அரசு பேருந்து கண்ணாடி அடித்து நொறுக்கினர்.

இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அம்பேத்கர் சிலை முன்பாக இருந்த அனைவரும் இடத்தை விட்டு அப்புறப்படுத்தினர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டு காவல் துறையினர் மீது கண்டறிந்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷெரீப் உள்ளிடோர் கல் எரிந்து தாக்குதல் நடத்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் காவல் வாகனங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரியகுளம் டி1 காவல் நிலையத்தில் கல் எரிந்து தாக்குதல் மற்றும் காவலர்கள் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.