சாம்சங் ஊழியர்களின் போராட்டம் - அமைச்சர் டிஆர்பி.ராஜா விளக்கம்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

சாம்சங் விவகாரம்: அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ள சிஐடியு!

சாம்சங் ஊழியர்களின் போராட்டம் முடிவுற்றது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் டிஆர்பி.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

PT WEB

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டம்:

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், முடிவு எட்டப்படாததால், 6ஆம் கட்டமாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சாம்சங் நிர்வாகத்தினருடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் கோரிக்கையான ஊதிய உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புகொண்டதாக அரசு தெரிவித்துள்ளது.

சாம்சங் ஊழியர்களின் போராட்டம்

“திசை திருப்பும் செயல் இது; போராட்டம் தொடரும்” - சிஐடியு

ஆனால், சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் முத்துக்குமார், “பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்புகள் தொழிலாளர்களுக்கு எதிரானது. போராட்டத்தின் உண்மை நிலையை திசைத் திருப்பும் செயல். எனவே, தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்” என்று அறிக்கை வழியாக அறிவித்துள்ளார். 14 கோரிக்கைகள் நிறைவேற்ற சாம்சங் நிறுவனம் முன்வந்துள்ளதாக அரசு கூறும் நிலையில், திசைத் திருப்பும் செயல் என சிஐடியு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர் டிஆர்பி. ராஜா செய்தியாளர் சந்திப்பு:

இந்நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் டிஆர்பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து விளக்கினார். அப்போது பேசிய அவர்...

சாம்சங் ஊழியர்களின் போராட்டம்

“போராடும் தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது”

சாம்சங் தொழிலாளர் போராட்டம் தொடர்பாக இரண்டு நாளைக்கு முன்பு சாம்சங் நிறுவனத்துடன் பேசினோம். இதையடுத்து சி.ஐ.டி.யூ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேசினோம். இதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடனும் பேசினோம். இந்நிலையில், மூன்று அமைச்சர்களும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். போராடும் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமத்தை அங்கிகரிக்க வேண்டும் என போராடுகின்றனர். ஆனால், இது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம். அதேபோல் போராடும் தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கை இல்லை என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“முதலமைச்சர் தொழிலாளர்கள் பக்கம்தான் இருக்கிறார்”

அனைவருக்கும் ஊதியம் குறைவாக இல்லை எனவும், பலருக்கு மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது என்றும், அடிப்படை வசதிகள் செய்துத் தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். அரசு தரப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்திருக்கிறோம். ஆனால், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர்.

ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் தொழிலாளர்கள் பக்கம்தான் இருக்கிறார். இதை போராடும் தொழிலாளர்கள் புரிந்து கொண்டு வேலைக்குத் திரும்ப வேண்டும்” என்று அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ள சிஐடியு

“காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்” - சிஐடியு அறிவிப்பு

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி அனைத்து ஆலைகளிலும் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று சிஐடியு அறிவித்துள்ளது. சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தோடு சாம்சங் நிர்வாகத்தை பேச அரசு கட்டாயப்படுத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். கோரிக்கை குறித்து உடன்பாட்டுக்கு வர வேண்டும். இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்த போராட்டத்தை தொடருவோம் எனவும் சிஐடியு தெரிவித்துள்ளது.