தமிழ்நாடு

அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திரையரங்குகள்:‘பார்க்கிங்’ கொள்ளை!

அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திரையரங்குகள்:‘பார்க்கிங்’ கொள்ளை!

webteam

தமிழக அரசு நிர்ணயித்த பார்க்கிங் கட்டணத்தை விட, 3 மடங்கு கட்டணத்தை திரையரங்குகள் வசூலித்து வருகின்றன.

தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை விதிகள் 195ன், 91பி பிரிவில் திருத்தங்களை கொண்டு வந்து,  திரையரங்குகளின் பார்க்கிங் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவுப்படி, மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாகும். நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில், கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 7 ரூபாய் வசூலிக்க வேண்டும். அத்துடன் கிராமப்புறங்களில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களை நிறுத்த 3 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த உத்தரவை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் கடைபிடிப்பதில்லை.

குறிப்பாக சென்னையில் ஒரு சில திரையரங்குகளை தவிர, அனைத்து திரையரங்குகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதுதொடர்பாக பலமுறை புகார்கள் எழுந்தும், திரையரங்கள் நிர்வாகம் அவற்றை பொருட்டாக கருதவில்லை. அத்துடன் அரசு உத்தரவையும் மதிக்காத வகையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு உத்தரவு பிறப்பித்தாலும் அதன் பலன் மக்களை சென்றடைவதில்லை என்பதற்கு இது ஒரு எடுக்காட்டாகும். இதுபோன்ற நிகழ்வுகள் அரசின் அனைத்து அறிவிப்புகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.