கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார் குறிச்சி தேவாலயத்தில் சமத்துவம் மற்றும் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரின் பங்களிப்புடன் தேவாலயமொன்றில் தயார் செய்யப்பட்டுள்ளன கிறிஸ்துமஸ் பலகாரங்கள். சுவையான பலகாரங்களை ஒருவொருக்கொருவர் பரிமாறி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நெகிழ்ச்சியான நிகழ்வும் அங்கு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே திருநயினார்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் தேவாலயம். இந்த தேவாலய சுற்றுவட்டார பகுதியில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் சாதி மத பாகுபாடின்றி புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஒன்று கூடி அவரவர் பங்களிப்பில் பொருட்களை கொண்டு வந்து கிறிஸ்துமஸ் பலகாரங்கள் செய்து பகிர்ந்துண்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்கள் பங்களிப்பாக எண்ணெய், இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் அரிசி மாவு மற்றும் கடலை மாவு என மாவு வகைகளையும் கொண்டு வந்து தேவாலய வளாகத்தில் ஒன்று கூடி கிறிஸ்மஸ் பலகாரங்களாக சுற்று முறுக்கு, அச்சு முறுக்கு, முந்திரி கொத்து உட்பட பல்வேறு சுவையான பலகாரங்களை தயார் செய்தனர்.
மதங்களை கடந்து மனித நேயமும், சகோதர உணர்வுடனும் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் ஈடுபட்டது பார்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. முன்னதாக பாலன் வரவால் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என்ற சிந்தனையோடு மும்மதத்தினரும் இணைந்து குத்துவிளக்கு ஏற்றினர். பின்னர் தயாரிக்க பட்ட இனிப்பு வகை பலகாரங்களை அனைத்து குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.