நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பட்டாசு வெடித்து கிராம மக்கள் கொண்டாட்டம் pt web
தமிழ்நாடு

மதுரை: மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் விவரத்தை, இங்கே காணலாம்...

PT WEB

செய்தியாளர்கள்: செ.சுபாஷ், சகாய பிரதீபா

விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள், ‘எங்களுக்கு மீள்குடியமர்வு ஏற்படுத்திக் கொடுத்த பின்பு நிலத்தை கையகப்படுத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்து கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், “மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை இடத்தை கையகப்படுத்தக் கூடாது” என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 633 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் 146க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் காலையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு

அதற்கான நிதி வழங்கப்பட்ட நிலையில் சின்ன உடைப்பு கிராம மக்கள், “நிலத்திற்கான இழப்பீடு 2009 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 16 ஆண்டுகள் கழித்து எங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய மதிப்பின்படி இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மேலும் 2013 சட்டத்தின்படி வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் மற்றும் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தனர்.

குவிக்கப்பட்ட 1000 போலீசார்; எதிர்த்த மக்கள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம்!

இதனிடையே நிலத்தை கையகப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை 1000க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிகாரிகள் சின்ன உடைப்பு கிராமத்திற்கு வந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது, தங்களுக்கு உரிய வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு இடத்தை கையகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் நடத்திய பேச்சு வார்த்தையில் தங்களுக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க சனிக்கிழமை வரை கால அவகாசம் கேட்டனர். அதன்பேரில் கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனாலும், தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் எனக் கூறி ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டம் வாபஸ்

சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டம் வாபஸ்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், "ஒரு நபருக்கு மட்டுமல்ல, ஒரு கிராமத்திற்கே மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர வேண்டியுள்ளது. தொழில்துறை தேவைகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது மறுகுடியமர்வு செய்துதரப்பட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்படுகிறது. தங்களது சொந்த நிலம், வீடுகளை அரசின் தேவைக்காக வழங்கும் இப்பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு நிச்சயம் செய்து தரப்பட வேண்டும். அதோடு தொழில்துறை சட்டப்படி யாருக்கும் நோட்டீஸ் வழங்கப்படவில்லை" என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “இந்த விவாகரத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்ட பிரிவின்படி முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். அதனைப் பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது” என அதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தும், வழக்கு தொடர்பாக தமிழக நில கையகப்படுத்துதல் பிரிவின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.