தமிழ்நாடு

சென்னைக்கு வந்த சீனக் கப்பலில் பூனை: அதிகாரிகள் விசாரணை!

சென்னைக்கு வந்த சீனக் கப்பலில் பூனை: அதிகாரிகள் விசாரணை!

webteam

(மாதிரிப் படம்)

சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்தது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு இடையே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 11-ஆம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்‌ட சுற்றறிக்கையில், சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது. ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழனன்று துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கண்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விளையாட்டு பொம்மைகள் அதிகம் நிரம்பிய கண்டெய்னர் ஒன்றில் விலங்குகள் பிரத்யேகமாக கொண்டுவரப்படும் கூண்டில் பூனை இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், சீனாவில் இருந்து வந்த கப்பலில், பூனை ஒன்று மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூனையை யார் அனுப்பியது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூனை மற்றும் கண்டெய்னரில் வந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.