தமிழ்நாடு

சென்னைக்கு வந்தது சீன அதிபர் கார் : அதிநவீன பாதுகாப்பு வசதிகள்..!

சென்னைக்கு வந்தது சீன அதிபர் கார் : அதிநவீன பாதுகாப்பு வசதிகள்..!

webteam

சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க வரலாறு காணாத வகையிலான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்து இயம்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. வரும் 11, 12 ஆகிய இரு தேதிகளில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, கலாச்சாரம், இருநாட்டு உறவுகள், பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தலைவர்களும் சென்னைக்கு வரும்போது தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவலின் படி, இருநாட்டு தலைவர்களையும் வரவேற்க சுமார் 52 ஆயிரம் பேரை அரசு தயார்ப்படுத்தியுள்ளது. 11ஆம் தேதி பிற்பகலில் சென்னைக்கு வந்து சேரும் சீன அதிபரை விமான நிலையத்தில் இருந்து ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டல் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, அனைவரும் வியக்கும் வகையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 6‌ ஆயிரத்து 800 கல்லூரி மாணவியர், சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் அதிமுக கட்சியினர் சாலையின் இருமருங்கிலும் மூவர்ணக்கொடி மற்றும் சீன கொடிகளை அசைத்துக்காட்டி வரவேற்பார்கள். வழிநெடுங்கிலும் ஆண்கள், பெண்களின் செண்ட மேளம், கோவை டிரம்ஸ் கலை நிகழ்ச்சி, வட இந்திய நாசிக் டோல் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஐடிசி சோழா ஓட்டலில் சீன அதிபரை வரவேற்கும் விதமாக வாழை மற்றும் கரும்பிலான வளைவும் அமைக்கப்படவிருக்கின்றது. ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து, மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு புறப்படும் சீன அதிபரை வரவேற்க 49 கிலோ மீட்டர் தொலைவுக்கு வழிநெடுங்கிலும் 46 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் அதிமுக தொண்டர்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் சீன அதிபர் தனது காரில் கண்டுகளிக்கவுள்ளார். இதற்காக அவரது கார் நேற்று சீனாவிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கார் சீன அதிபருக்காகவே அவர்கள் நாட்டில் எஃப்ஏடபிள்யு (FAW) என்ற சீன நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்தில் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஹாங்கி 5’ என்ற மாடல் கார் தான் தற்போது சீன அதிபரின் அதிகாரப்பூர்வமான காராக உள்ளது. இந்த கார் அவருக்கு மட்டும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த காரில் தான் அவர் சீனாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இதே நிறுவனம் தயாரித்த ‘ஹாங்கி 9’ மாடல் கார்கள் சீன அரசின் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

சீன அதிபரின் பாதுகாப்பிற்காக, எந்த ரக துப்பாக்கி குண்டுகளும் துளைக்க முடியாத கண்ணாடிகள் இந்த காரில் உள்ளன. அத்துடன் ரக ராக்கெட் லாஞ்செர்களை கொண்டு தாக்கினாலும் இந்த கார் அசராது. ஆடம்பர காரான இது, 6 தானியங்கி கியர் வசதிகளைக் கொண்டது. இதில் 110 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்ப முடியும். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய இந்த கார், 3150 கிலோ எடை கொண்டது. இவற்றுடன் அறிவிக்கப்படாத பல கூடுதல் வசதிகளும் இந்த காரில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ.5.4 கோடியாகும்.