தமிழ்நாடு

செல்போனும் கையுமாக இருக்கும் சிறார்களுக்கு இந்த ஆபத்து உண்டு! எச்சரிக்கும் மருத்துவர்கள்

செல்போனும் கையுமாக இருக்கும் சிறார்களுக்கு இந்த ஆபத்து உண்டு! எச்சரிக்கும் மருத்துவர்கள்

ச. முத்துகிருஷ்ணன்

இணையதளங்களுக்கு சிறார் அடிமையாவது அதிகரித்துள்ளதாகவும் மனநல சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு இந்த இணைய அடிமைத்தனம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

என் மகனுக்கு செல்போனில் எல்லாம் தெரியும். என்னைவிட அப்டேட்டாக இருக்கிறான் என பெருமை பேசும் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கானதுதான் இந்த செய்தி. இணையதளங்களுக்கு சிறார் அடிமையாவது அதிகரித்துள்ளதாகவும் மனநல சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு இந்த இணைய அடிமைத்தனம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இணையதளங்களுக்கு அடிமையாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்போனில் நேரம் செலவிடும் சிறார்களை மிகவும் எச்சரிகையாக கையாள வேண்டும். பெற்றோர் விழிப்புடன் இருப்பது அவசியம் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், பிள்ளைகளை பெற்றோர் கவனித்து வழிநடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

இணைய அடிமைத்தனம் அறிகுறிகள்:

1. நீண்ட நேரம் செல்போன் பார்த்தபடி இருத்தல்

2.பசியின்மை

3.தூக்கமின்மை

4.அதீத கோபம்

அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட Internet deaddiction centre ல் மட்டும் இதுவரை 72 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதில் 23 பேர் 5 முதல்10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். மற்றவர்கள் 10 வயதைக் கடந்தவர்கள் என்றாலும், அதிலும் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களாகவே இருக்கின்றனர். மையம் தொடங்கப்பட்ட 5 மாதங்களில் சிகிச்சைக்கு வந்த 72 பேரில் 80% பேர் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக கூறும் மருத்துவர்கள், ஒரு சிலர் தொடர் சிகிச்சையில் இருப்பதாக கூறுகிறார்கள்.

“இந்த இணைய அடிமைத்தனத்தால் ஓமந்தூரார் மருத்துவமனையில் 72 சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையில் 72 பேர் குணமடைந்துள்ளனர். 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சிகிச்சை முடிந்து பொதுத் தேர்வெழுதினார். தற்போது சிறார்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மட்டும் மருந்து அளிக்கிறோம்” என்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ASTON ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் நீண்ட நேரம் செல்போன் பார்த்தபடி இருத்தல், பசியின்மை, தூக்கமின்மை, அதீத கோபம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இணையதள சார்பு நிலை மீட்பு மையத்தை பெற்றோர் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். வெளிஉலகை ஆராயாமல், தனது திறமைகளை உணர்ந்து கொள்ளாமல், கையடக்க செல்போனுக்குள் தொலைந்துவிடும் சிறார்களை அதிலிருந்து மீட்டெடுப்பதென்பது அவர்களின் வருங்காலத்தையும் மீட்டெடுப்பதாகவே அமையும்.