’குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரினும் இணையத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்’ என்று இந்திய மனநல மருத்துவர்கள் சங்க தமிழகத் தலைவர் சபிதா தெரிவித்துள்ளார்.
இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மனநல மருத்துவர்களுக்கான கருத்தரங்கு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனநல மருத்துவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மனநல சிறப்பு மருத்துவர் சிவசைலம் ஒருங்கிணைப்பு செய்தார். தூத்துக்குடி மருத்துவர் கல்லூரி முதல்வர் மருத்துவர் ரேவதி பாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் இந்திய மனநல மருத்துவர் சங்க தமிழக தலைவர் சபிதா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,
”குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் ஆகியோருக்கு தற்போதைய காலகட்டத்தில் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக எழுகின்றன. அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கும், மீட்டெடுப்பதற்கான கருத்தரங்கு தூத்துக்குடியில் இன்று நடைபெறுகிறது. குழந்தைகள், வளர்இளம் பருவத்தினர், மனிதன் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே மனித வளர்ச்சி அமைந்துள்ளது. இதில் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கான பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்தும் மனநலம் சார்ந்து அவர்களை திடப்படுத்தும் அவசியமாகிறது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் அதிகரித்துள்ள மனநல பிரச்சினைகள் என்பது வளர்ந்துவிட்ட தகவல் தொழில்நுட்பத்தினால் ஏற்படுகிறது என கூறலாம். குறிப்பாக இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுதல், இது தவிர பெற்றோர் கண்பார்வையில் இருப்பதனால் ஏற்படும் அழுத்தம், மேலும் படிப்பு ரீதியாக பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படும் என்பதால் மனநல மருத்துவர்களை நாடும் நிலை ஏற்படுகிறது.
அதற்கான தீர்வைத் தேடும் ஒரு கருத்தரங்க இன்று இதனை ஏற்பாடு செய்துள்ளோம். பொதுவாக இப்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் தங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை கோபப்படுதல், எதிர்த்துப் பேசுதல், கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற வெவ்வேறு காரணிகள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர். இணையத்தை பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதைவிட பயனுள்ள வகையில் அதனை பயன்படுத்த வேண்டும்” என சொல்லி தர வேண்டும் என்றார்