தமிழ்நாடு

சுஜித் உடல் நேரடியாக கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

சுஜித் உடல் நேரடியாக கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

rajakannan

அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.

இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சுஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வருகை தந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுஜித்தின் உடல் உடனடியாக நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதனிடயே, மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தை சுஜித்தின் உடலுக்கு விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. 

மருத்துவமனையில் இருந்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.