தமிழ்நாடு

10 குழந்தைகளை விற்றதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாக்குமூலம்

Rasus

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஓய்வுபெற்ற செவிலி அமுதாவிடம்10 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தனியார் மருத்துவமனை செவிலி பர்வீன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லிமலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளை அமுதாவிடம் விற்றேன் என முருகேசன் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் தவிர திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானியைச் சேர்ந்த 3 பெண்களிடம் குழந்தை விற்பனை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் ராசிபுரம் மற்றும் கொல்லிமலையில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராயும் பணியும் நடந்து வருகிறது. இதன்மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.