தமிழ்நாடு

குழந்தை திருமணம்: ஏற்பாடு செய்பவர்கள், கலந்து கொள்பவர்கள் மீது வழக்கு பாயும் என எச்சரிக்கை

குழந்தை திருமணம்: ஏற்பாடு செய்பவர்கள், கலந்து கொள்பவர்கள் மீது வழக்கு பாயும் என எச்சரிக்கை

kaleelrahman

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், திருமண வயதை எட்டாத சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில், ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. தகவலறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், போலீசார் ஆகியோர், சிறுமியருக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

18 வயது பூர்த்தியாகாத பெண்ணுக்கோ, 21 வயது பூர்த்தியாகாத ஆணுக்கோ திருமணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. எனினும், பல இடங்களில் திருமண வயதை எட்டாத சிறுமியருக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களில், 2019-ல், 49 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் 2020-ம் ஆண்டில் மட்டும் 64 குழந்தை திருமணங்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு, 2021-ம் ஆண்டில் இதுவரை, 21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஒரு வழக்கு பதியப்பட்டு உள்ளது. திருமண வயதை எட்டாத சிறுமியோ அல்லது சிறுவருக்கோ, திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் உறவினர்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்கும் நபர்கள் மீதும், வழக்கு பாயும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் கூறினர்.

குழந்தை திருமணம் தொடர்பாக கடுமையான சட்டம் இருந்தும், நவீன காலமான தற்போதும் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில், போதிய விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்கள் இப்போதும் இருக்கின்றனர் என்பதுதான் வேதனை.