சென்னை 8 மாத குழந்தையை பெண் ஒருவர் கடத்த முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சோனியா என்ற பெண், தன் 8 மாத குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அதே சிகிச்சை வார்டில் புரசைவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையையும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். நேற்று சோனியா அருகில் எங்கேயோ செல்ல, அவரது குழந்தை மட்டும் தனியாக சிகிச்சைப்படுக்கையில் இருந்துள்ளது. தாயைக் காணாததால் குழந்தை கதறி அழுதுள்ளது. இதைக்கண்ட புரசைவாக்கத்துப் பெண் குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சோனியா திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டு கதறியுள்ளார். அதற்குள் லிப்ட் அருகே குழந்தையுடன் இருந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் பிடித்துவிட்டனர். அவர் புரசைவாக்கத்துப் பெண்ணின் உறவினர் எனக்கூறப்படுகிறது. இதையடுத்து சோனியா தனது குழந்தையை கடத்த முயற்சித்ததாக காவல்துறையிடம் புகார் அளித்துவிட்டார். பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, குழந்தை அழுததால் அதனை புரசைவாக்கத்துப் பெண் சமாதானம் செய்ததாகவும், அவர் அருகில் செல்லும்போது தன்னிடம் கொடுத்துவிட்டுச்சென்றதாகவும் அந்த நபர் கூறியதாக தெரிகிறது. பின்னர் வந்த புரசைவாக்கத்துப் பெண்ணையும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
Read Also -> புழல் சிறை முதல்வகுப்பு சொகுசு வசதிகள் நிறுத்தம் !