தமிழ்நாடு

முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்

முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்

நிவேதா ஜெகராஜா

அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் வழியாக தமிழ்நாட்டில் தாலுகா அலுவலகச் செயல்பாடுகளை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவை: `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை வருவாய்த் துறை நிர்வகிக்கிறது. அவற்றில் முக்கியமானவை பட்டா மாற்றம், நிலப் பிரிப்பு, பல்வேறு வகை சான்றிதழ்களை வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை ஆகும். ஆனால் இந்த சேவைகளை வழங்குவதில் பல இடங்களில் காலதாமதமும், குறைபாடுகளும் காணப்படுகின்றன.

சென்னையில் ஒரு தாலுகா அலுவலகத்தில் முதல்வர் சோதனை நடத்தி பல்வேறு குறைபாடுகளைக் கண்டறிந்தார். எனவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாலுகா அலுவலகங்களுக்குச் சென்று குறிப்பிட்ட சில சேவைகளை விரிவாக ஆய்வு செய்து குறைகளை சுட்டிக் காட்ட வேண்டும்.

அந்த வகையில் வருவாய் சான்று, சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். சான்றிதழ் வழங்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட நிகழ்வுகளை பரிசீலனைக்கு எடுத்து, தள்ளுபடிக்கான காரணங்கள் சரிதானா? என்று ஆய்வு செய்ய வேண்டும். முதியோர் ஓய்வூதிய திட்டம் குறித்த நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.

நிலப் பிரிவுக்கு வராத பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். நிலப் பிரிவு விவகாரங்களில் சர்வேயர்களின் செயல்பாடுகளை ஆராயப்பட வேண்டும். தவறுகள் இருக்கும் பட்டாக்களை திருத்துவதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதா? பட்டா மாறுதலில் உள்ள அப்பீல் விண்ணப்பம் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த ஆய்வுக் குறித்த அறிக்கையை அரசுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்'

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் தாலுகா அலுவலகம் ஒன்றில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நிவாரணத்திற்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதனால் இனி தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.