தங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்” என்றார்.
மேலும், "ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் எங்களை ஆதரிக்கின்றனர். கே.பி.முனுசாமி கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றார் சி.டி.ரவி.
முன்னதாக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அதிமுக பாஜகவுடனான கூட்டணி தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினர்.
இதனையடுத்து பாஜக - அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கருதப்பட்ட நிலையில், "யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையே வார்த்தைப்போரே நடந்துவந்தது. அதிமுக அமைச்சர்கள் ஒருபக்கமும், தமிழக பாஜகவினர் மறுபக்கமும் மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்து வந்த சூழலில், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றைய அறிவிப்பு பார்க்கப்படுவது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்றும், போட்டியானது அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் என்றும் கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.