தமிழ்நாடு

50 லட்சமாவது பயனாளி: வீட்டுக்கே சென்று மருத்துவப் பெட்டியை வழங்கிய முதல்வர்

50 லட்சமாவது பயனாளி: வீட்டுக்கே சென்று மருத்துவப் பெட்டியை வழங்கிய முதல்வர்

நிவேதா ஜெகராஜா

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் 50 லட்சமாவது பயனாளியான பாஞ்சாலி என்பவரது வீட்டுக்கே சென்று மருத்துவ பெட்டகத்தை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சுகாதார கட்டமைப்பில் வலுவான ஒரு மாநிலமாக தமிழகம் இருந்தாலும் எளிய மக்கள், வாழ்வாதாரம் இல்லாதவர்கள், வயதானவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என பல தரப்பினர் பொருளாதார ரீதியிலும் பல்வேறு காரணங்களாலும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல முடியாத சூழல் இருகிறது.

இதனால் ஏழை எளிய மக்களை கருத்தில் கொண்டு 100% மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழக அரசு வீடு தேடி மக்களுக்கு மருத்துவத்தை கொண்டு சேர்க்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை ரூபாய் 242 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கியது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமணபள்ளி கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

கடந்த வருடம் ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம், தொடங்கப்பட்ட ஆறு மாதத்தில் 50 லட்சம் பயனாளிகளை கடந்து வெற்றிகரமான திட்டமாக தடம் பதித்துள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடி சென்று மருத்துவ பெட்டகத்தை வழங்கினார். மேலும் நான்கு வீடுகளுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறதா எனக் கேட்டறிந்தார். தங்கள் வீட்டுக்கு வீட்டுக்கு வந்த முதலமைச்சரை நெகழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள், மக்களை தேடி மருத்துவர் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

இத்திட்டத்தை போலவே `இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டமும், `நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டமும்கூட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்ட அடுத்த 48 மணி நேர சேவையை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இதுவரை பயன்பெற்றுள்ளனர். சரியாக 21,762 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இன்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு பெட்டகம் அளிக்கும் விழாவின்போது, அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட 188 புதிய அவசர 108 சேவை ஊர்திகளையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் உடன் மேடையில் கலந்துரையாடினார்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுக்கு 3.4 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு `நடக்கவே இயலாதவர்கள்’ என்று சொல்லப்பட்ட நபர்கள் முதலமைச்சர் முன்னிலையில் நடந்து காண்பித்த சம்பவம் நிகழ்வில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

- ஆனந்தன்