தமிழ்நாடு

வேலூர் தேர்தல் - 27 ஆம் தேதி முதல்வர் பரப்புரை 

வேலூர் தேர்தல் - 27 ஆம் தேதி முதல்வர் பரப்புரை 

webteam

வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக வரும் 27 ஆம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். 

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். 

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கதிர் ஆனந்தை ஆதரித்தும் திமுக பிரமுகர்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வானியம்பாடி பகுதியிலும் மாலை 6 மணிக்கு ஆம்பூர் பகுதியிலும் பரப்புரை மேற்கொள்கிறார். 28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கீழ் வைத்தியான்குப்பம் பகுதியிலும் மாலை 6 மணிக்கு குடியாத்தம் பகுதியிலும் பரப்புரை மேற்கொள்வார். மேலும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பகுதியிலும் மாலை 6 மணிக்கு வேலுர் பகுதியிலும் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையை தொடங்கும் அதே நாளான ஜுலை 27 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினும் கதிர் ஆனந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.