தமிழ்நாடு

குரங்கை காப்பாற்ற முயன்ற கார் ஓட்டுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டு

குரங்கை காப்பாற்ற முயன்ற கார் ஓட்டுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டு

நிவேதா ஜெகராஜா

குரங்கிற்கு சி.பி.ஆர். முதலுதவி அளித்து அதன் உயிரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவர் பிரபு, இன்று முதல்வரிடம் நேரில் பாராட்டை பெற்றுள்ளார். பாராட்டை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது, “காட்டுக்குள் இருந்து வரும் வன விலங்குகளை யாரும் துன்புறுத்தாதீர்கள், முடிந்தால் வனவிலங்குகளுக்கு உணவு அளியுங்கள்” என பேசினார் அவர்.

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் சமத்துவபுரம் கிராமத்தில் நான்குக்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை, தன் மூச்சை கொடுத்து காப்பாற்றிய கார் ஓட்டுநர் பிரபுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கார் ஓட்டுனர் பிரபுவின் செயலை பாராட்டினர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, “ஒரு சாதாரண குரங்கு என்னை இந்த இடத்தில் வந்து நிறுத்தியிருக்கிறது. நான் எதையும் எதிர்பார்த்து அதை செய்யவில்லை. குரங்கை காப்பாற்றும் போது வீடியோ எடுத்தது கூட எனக்கு தெரியாது. ஆனால் ஒரு உயிரை காப்பாற்றிய நிகழ்வு என்னை தற்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

சமீப காலமாக காட்டிலிருந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறித்து நாம் அதிகமாக காண்கிறோம். காட்டிற்குள் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவது உணவுக்காகத்தான். அப்படி ஊருக்குள் வரும் வன விலங்குகளை யாரும் துன்புறுத்த வேண்டாம் என்பதே என் கோரிக்கை. முடிந்தவரை ஊருக்குள் வரக்கூடிய விலங்குகளுக்கு உணவளியுங்கள்” என தெரிவித்தார்.