தமிழ்நாடு

என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Sinekadhara

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ’தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்று ஆகியவற்றை சுந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இந்த விருதுக்கு முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் என்.சங்கரய்யாவின் உடல்நிலையை கருதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விருதுடன் அளித்த ரூ.10 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார் என்.சங்கரய்யா.

தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமை என்.சங்கரய்யா ஆவார்.