தமிழ்நாடு

பாரதியார் வாழ்ந்த உ.பி இல்லத்தை புனரமைத்த தமிழக அரசு! திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

பாரதியார் வாழ்ந்த உ.பி இல்லத்தை புனரமைத்த தமிழக அரசு! திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

webteam

உத்தரப்பிரதேசத்தில் பாரதியார் மாணவப் பருவத்தில் வாழ்ந்த இல்லம், புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதையும் அங்குள்ள அவரது சிலையையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்தபடி காணொளி மூலம் இன்று திறந்து வைக்கிறார். மேலும் பாரதியாரின் நூற்றாண்டு விழா மலரையும் தமிழக அரசு சார்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இன்று (டிசம்பர் 11, 2022) முண்டாசு கவிஞன் பாரதியின் 141-வது பிறந்தநாளாகும். பாரதியார், தனது இளமைப்பருவத்தில் வாரணாசியில் 4 வருடங்கள் வாழ்ந்தார். ஹனுமான் காட் என்கிற பகுதியில் தனது உறவினர் இல்லத்தில் வாழ்ந்த பாரதியார், காசியில் பல வடமொழிகளை மக்களுடன் கற்றார் என்பது அவரது மாணவ பருவத்தின் சுவாரசியமான அம்சமாகும். அப்போது அவர் வாழ்ந்த இல்லத்தில் உள்ள பாரதியார் அறை, அவருடைய நினைவிடமாக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழக பொதுப்பணித்துறை கண்காணிப்பில் அந்த பணி நடைபெற்று வந்தது. அதன் முடிவாக, தற்போது அந்த அறையில் மகாகவிக்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா நடைபெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் மகாகவி சிலையை திறந்து வைப்பார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காசி ஹனுமான் காட் பகுதியில் கங்கை கரை அருகில் மகாகவி பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. பனாரஸ் நகரில் வாழ்ந்த நாட்களில், சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். தமிழகத்துக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிக்கும் இடையே உள்ள தொடர்பில், பாரதியாரின் இந்த நினைவிடம் முக்கிய அம்சமாக அமையும் என கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கங்கையில் நீராடவும், காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  வழிபாடு செய்யவும் லட்சக்கணக்கோனார் தமிழகத்திலிருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

முன்னதாக தமிழகம் -வாரணாசி தொடர்பை கொண்டாட நடைபெறவுள்ள  ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். பிரதமரின் 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு மாத காலத்துக்கு ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.