தமிழ்நாடு

எம்.எல்.ஏக்களுக்கு பிரியாணி, பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்?

எம்.எல்.ஏக்களுக்கு பிரியாணி, பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்?

PT WEB

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், சிக்கன நடவடிக்கையாக முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, பிரியாணி, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நடைமுறையை கைவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர் ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்படுவது வழக்கம். சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள், காவல் துறையினர் என ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்குவதற்காக அந்தந்த அரசுத்துறையிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு செலவு செய்வதற்கு அரசுத்துறைகளின் பட்ஜெட்டில் எந்த அனுமதியும் கிடையாது.

இந்நிலையில், முதல்முறையாக சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக, இந்த நடைமுறையை கைவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தந்த துறைத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏக்கள் தங்கள் உணவை சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அல்லது சட்டசபை கேண்டீனில் உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.