தமிழ்நாடு

``மேலிட ஆணைக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுங்க”- காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

நிவேதா ஜெகராஜா

“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் அமைதியை நிலைநாட்ட, மேலிடத்தில் இருந்து ஆணை வரவேண்டும் என காத்திருக்காமல், காவல் கண்காணிப்பாளர்களே சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய முதலீடுகள் வருவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் சட்டம் ஒழுங்கு முக்கியம். மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் குறைந்த வாழ்க்கை முறையை கொண்டுவரவேண்டும்” என்று பேசினார்.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுடனான கூட்டத்தில் கொரோனா பரவல் மற்றும் பேரிடர் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளைப் பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். அதோடு, சிறப்பாகப் பணியாற்றியதற்காக- தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மதுரை மாநகரக் காவல் ஆணையருக்கும் விருதுகள் வழங்கினார்.

அடுத்த ஆண்டு இந்த விருதைத் தாங்களும் பெற வேண்டும் எனக் காவல்துறையில் உள்ள அனைவரும் பாடுபடுவர்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரித்துள்ளார். நேற்று காலை இந்நிகழ்வுகளை தொடர்ந்து, நேற்று மாலை நடந்த கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.