தமிழ்நாடு

ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க முயன்று உயிரிழந்த யாகேஷ்- ரூ.10 லட்சம் நிவாரணம்..!

ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க முயன்று உயிரிழந்த யாகேஷ்- ரூ.10 லட்சம் நிவாரணம்..!

webteam

திருவள்ளூரில் ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க முயன்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் செம்பரப்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை (29) ஷேர் ஆட்டோ வழி மறித்துள்ளது. அந்த ஆட்டோவில் ட்ரைவர் மற்றும் இரு ஆண்கள் இருந்துள்ளனர். அது அந்த வழியாக வழக்கமாக செல்லும் ஷேர் ஆட்டோ தான் என நம்பிய அப்பெண் ஏறி அமர்ந்துள்ளார். ஆனால் வழிமாறிச்சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் மீது சந்தேகம் அடைந்த பெண், வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்த நபர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

இதற்கிடையே அந்த ஆட்டோ, கடம்பத்தூர் அருகேயுள்ள கொண்டஞ்சேரி கிராமத்தை சென்றடைந்தது. கிட்டத்தட்ட 13 கிமீ கடந்துவிட்ட நிலையில் உதவிக்காக அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற 5 இளைஞர்கள் ஷேர் ஆட்டோவை துரத்தியுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவில் இருந்து குதித்து அப்பெண் தப்பித்துள்ளார். ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்ததால் காயமடைந்த பெண்ணை 3 இளைஞர்கள் மீட்டு பத்திரப்படுத்த மற்ற இரு இளைஞர்கள் தொடர்ந்து ஆட்டோவை இரு சக்கர வாகனம் மூலம் துரத்தியுள்ளனர்.

ஆட்டோ மூலம் இருசக்கர வாகனத்தில் மோதியதால் நிலைகுலைந்த இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த யாகேஷ் என்ற இளைஞர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரும் தப்பித்த நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடத்தல் மற்றும் கொலை வழக்குகளின் கீழ் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இந்த சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆட்டோவை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த யாகேஷின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், காயமடைந்த ஃபிராங்க்ளின் என்பவருக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 இளைஞர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.