தமிழ்நாடு

சென்னையில் நடைபெற்று வரும் சாலை பணிகள் - முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

JustinDurai

சென்னை மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளில், புதிய தார்சாலை போடும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தமிழகமெங்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சியில் 312 கிலோமீட்டர், பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் 1675 கி.மீ., பேரூராட்சிகளில் 1,110 கி.மீ., ஊராட்சிகளில் 650 கி.மீ. நீளமுள்ள பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள வாரன்ஸ் சாலையிலும், மகாலிங்கபுரத்திலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நேற்றிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். தாா்க் கலவையில் தாரின் சதவீதம் சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீா் தேங்காவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.

அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தெற்கு வட்டார துணை ஆணையா் ஷேக் அப்துல் ரகுமான், தலைமைப் பொறியாளா் (பொது) எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.