தமிழ்நாடு

பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

JustinDurai
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என குற்றஞ்சாட்டி உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையில், புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால், ஏற்கெனவே பணியில இருந்த அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இத்தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ தமிழக கோயில்களில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. கலைஞர் கொண்டுவந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்” என்றும் பதில் தெரிவித்தார். மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது எனவும் முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.