தமிழ்நாடு

மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகம்: காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதல்வர்

மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகம்: காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதல்வர்

நிவேதா ஜெகராஜா

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அந்த விழாவில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் போராட்டம் மற்றும் கால்நூற்றாண்டு கனவாக இருந்த தனிமாவட்டம் கோரிக்கையை 2020 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியிருந்தார். அதுகுறித்த முதல் அறிவிப்பு, ‘தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் அதே ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2020 டிசம்பர் 28-ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியராக லலிதா நியமனம் செய்யப்பட்டார்.

இப்படியான சூழலில்தான் தற்போது மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகம் தற்காலிக ஆட்சியர் அலுவலமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று, அந்தப் புதிய பிரம்மாண்ட கட்டடம் (7 மாடி கொண்ட) முதல்வரால் அடிக்கல்நாட்டி தொடங்கிவைப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.