தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் உள்ளது எனவும் மும்மொழிக் கொள்கையை தான் ஆதரிக்கவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி, பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிப்பது உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, மும்மொழி கொள்கையை தமிழக முதல்வர் ஆதரிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. முதலமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தி மொழி தொடர்பான தன்னுடைய ட்விட்டர் பதிவை முதலமைச்சர் பழனிசாமி நீக்கினார்.
இந்நிலையில் மும்மொழிக்கொள்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் இருக்கும். இருமொழிக்கொள்கையை பின்பற்றியே அதிமுக ஆட்சி இருக்கும். மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிக்கவில்லை. மும்மொழிக் கொள்கைகையை நான் ஆதரிப்பதாக எப்போது கூறினேன்?. அரசியல் ஆதாயத்திற்காக சிலர் தன் மீது அவதூறு பரப்புகின்றனர். பிறமாநிலங்களில் தமிழை பயிற்றுவிக்க வேண்டும் என்றுதான் டிவீட் செய்திருந்தேன். பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுதான் டிவீட் செய்திருந்தேன்.
ஜெயலலிதா இருந்தபோது தனித்து போட்டியிட்டதால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்தது. தற்போது அதிமுக போட்டியிட்ட தொகுதிகள் குறைந்ததால் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. தமிழகத்திற்கு நீர் திறக்க திமுக எம்.பிக்கள் கர்நாடக அரசை வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன். குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறக்கும் என நம்புகிறேன். முழுமையான மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிமுகவிற்கு வருபவர்களை இணைக்க நானும் ஒபிஎஸ்சும் இணைந்தே செயல்படுகிறோம்” எனத் தெரிவித்தார்.