தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ரூ. 987 கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நிதியாக ரூ. 60 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி முடிவடைவதாக இருந்த கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையுடன் நிறைவடைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்த நிலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.