தமிழ்நாடு

“போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்” - ஆசிரியர்களுக்கு முதல்வர் அன்பான வேண்டுகோள்

“போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்” - ஆசிரியர்களுக்கு முதல்வர் அன்பான வேண்டுகோள்

webteam

அரசு ஊழியர்களும், ஆசிரிய பெருமக்களும் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த அரசு ஏழை எளிய மக்கள் நலன் காக்கும் அரசு. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு என்றும் புறந்தள்ளியது இல்லை. அதனால் தான் மத்திய அர்சு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து அதன் பரிந்துரையை உரிய காலத்திலேயே பெற்று, ஒரே மாதத்தில் பரிசீலித்து ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.

இதனால் ஆண்டுக்கு 14, 500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும் அரசு ஊழியர்களின் நலன் கருதி கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், ஊதிய உயர்வை அமுல்படுத்தியுள்ளோம். மாநில அரசு மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும். இதில் என்னோடு அரசு ஊழியர்களாகிய உங்களுக்கும் முழு பங்கு உண்டு. நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால்தான் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தியாக உணர்வோடு, நம் உரிமைகளையும் சில நேரங்களில் விட்டுக்கொடுத்து, மக்கள் பணியாற்றுவது நம் கடமை. 

தமிழ்நாடு தற்போது கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது. கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தரவேண்டும். விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும். இதற்கு நாம் அனைவரும் அர்பணிப்பு உணர்வோடு கடும் பணியாற்ற வேண்டும். இத்தகைய சூழலில் உரிமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது நாம் மேற்கொண்டிருக்கும் மக்கள் பணிக்கு பொருத்தமாக அமையாது. 

எனவே அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு மக்கள் பிரச்னைகளுக்கு திரும்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நான் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம், போராட்டத்தை உடனடியாக கை விடுங்கள். பணிக்கு திரும்புங்கள். இதை எனது அன்பான வேண்டுகோளாக கருதி நாளையே அனைவரும் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.