தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரியல், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ரீல் - கடம்பூர் ராஜூ

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரியல், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ரீல் - கடம்பூர் ராஜூ

kaleelrahman

சாலை அமைக்கும் பணி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரியல் - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ரீல் எனத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 40.52 கிலோ மீட்டர் தூரம் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்...


" தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியுள்ளார். 2016-ல் ஆட்சிக்கு வந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார். தற்பொழுது விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 12,110 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

நாங்கள் சொல்வதை அதிமுக அரசு செய்கிறது என்று கூறி இதைக்கூட எதிர்க்கட்சி தலைவர் அரசியலாக பார்க்கிறார். எதிர்க்கட்சி தலைவர் என்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைப்பதுதான் கடமை. நல்ல கருத்துகளாக இருந்தால் அதை அதிமுக அரசு ஏற்றுக்கொள்கிறது என்பதை மு.க.ஸ்டாலின் ஒத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

கொரோனா காலத்தில் அனைவருக்கும் தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கினார். மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்க வேண்டும் என யோசித்த முதல்வர், ஒரு ஆண்டு பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகிப் போய்விடும் என்று கருதி அனைவரையும் ஆல் பாஸ் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆல் பாஸ் முதல்வர் என்று மாணவர்கள் கைதட்டி வரவேற்கின்றனர்.

எதிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்து பழக்கப்படடவர். குடிமராமத்து பணி, அம்மா கிளினிக், அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் என பல திட்டங்களை மக்களுக்கு அதிமுக அரசு தந்துள்ளது. இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதிமுக அரசு மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கும் காட்சியை பார்க்க முடிகிறது. 2021ல் அதிமுக அரசு மலரும் அது எங்களின் நம்பிக்கை மட்டுமல்ல நிதர்சமான உண்மை.

குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் போன்று தான் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். மு.க.ஸ்டாலினால் திமுகவினர் நொந்து போய் உள்ளனர். அதிமுக சாதனைகளை சொல்லி வருகிறது. திமுக தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் தொலைக்காட்சி மட்டும் வழங்கியுள்ளது. திமுக குடும்ப கேபிளுக்காக தொலைக்காட்சி வழங்கப்பட்டது. 2 ஏக்கர் நிலம் தருவதாக திமுகவினர் சொன்னார்கள். அதை எந்த ஊர் அல்லது எந்த நாட்டில் கொடுத்தனர்.

சொன்ன வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றியுள்ளதால் ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் உளறிவருகிறார். அவர் பேச்சில் தெளிவு இல்லை. 'உங்கள் தொகுதியின் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் திமுகவினர் செட்டப் செய்து ஆட்களை பேசவைத்து வருகின்றனர். செட்டப் செய்து மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரியல் - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ரீல்" என்றார்.