தமிழ்நாடு

ரூ. 3000 கோடி நிதி வழங்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

webteam

 முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் எனப் பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தற்போதைய நிலவரம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் உரையாடினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் இந்த காணொளி ஆலோசனையில் கலந்து கொண்டனர். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.



அதனைத் தொடர்ந்து, கொரோனாவை எதிர்கொள்வதற்காக முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காகத் தமிழகத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் பிரதமர் மோடியிடம் கோரிக்கையை முன்வைத்தார்.ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளுக்கு கோரிய 9 ஆயிரம் கோடி ரூபாயையும் ஒதுக்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை உபகரணங்களைக் கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மி கேட்டுக்கொண்டார்.

2019-20ஆம் ஆண்டு டிசம்பர் - ஜனவரி மாதங்களுக்கான ஜிஎஸ்டி நிதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், 2020-21ஆம் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை‌ மத்திய அரசு முன்கூட்டியே வழங்க வேண்டும் என தமிழக முதல்வர், பிரதமர் மோ‌டியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.