தமிழ்நாடு

தேர்தல் வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் : தலைமை நீதிபதி

தேர்தல் வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் : தலைமை நீதிபதி

webteam

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

2019 ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலும்,18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொடர்பான ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சில வழக்குகள் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வழக்குகள் தாக்கல் செய்வதன் மூலம் ஒரே தன்மையுடைய வழக்குகளில் இரு வேறு தீர்ப்புகள் வெளியாவதை தடுக்கவும், ஒரே கோரிக்கைக்கு இரு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கவும் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரதான அமர்வான சென்னையில் மட்டுமே விசாரிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில் 2011 உத்தரவு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயாகம்லேஷ் தஹிலரமானி  அமர்வின் கவனத்துக்கு கொண்டுவரபட்டது. இதை பரிசீலினை செய்த தலைமை நீதிபதி, 2019 மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.