பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் நாட்டையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க கோரி 10 பேர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால குற்றப் பத்திரிகையை சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.