தமிழ்நாடு

வெள்ளி முதல் தொடர் வேலை நிறுத்தம் - தலைமைச்செயலக ஊழியர்கள் அதிரடி

வெள்ளி முதல் தொடர் வேலை நிறுத்தம் - தலைமைச்செயலக ஊழியர்கள் அதிரடி

webteam

தலைமை செயலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை நிர்வாக ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் நாளை முதல் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அந்தந்த சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமை செயலக அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் 30 ஆம் தேதி ஒருநாள் மட்டும் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் தலைமை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தலைவர் அந்தோணிசாமி கூறுகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி முதல்வர் தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.