தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் முத்துகுமாரசாமி. அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு வழக்குகளில் அவர் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
அண்மையில் 26 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து ஒருமாத காலம் பரோலில் வந்திருக்கிறார் ராஜீவ் கொலை குற்றவாளியாக கருதப்படும் பேரறிவாளன். பேரறிவாளன் பரோல் முடிவை அரசு எடுத்திருந்தாலும், அதற்கான பரிந்துரையை வழங்கியவர் முத்துகுமாரசாமிதான். அதேபோல் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளிலும், தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தமிழக அரசு சார்பில் திட்வட்டமாக தெரிவித்தவர்.
தற்போதைய பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், முத்துக்குமாரசாமி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைபேசி வழியாக அவரைத் தொடர்பு கொண்ட போது, உடல் நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.
முத்துக்குமாரசாமியின் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது பதவிக்கு விஜயநாராயணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.