அரவிந்த் குமார் pt web
தமிழ்நாடு

சென்னை: “கணவர் மட்டுமே காரணம்” - விபரீத முடிவெடுத்த மனைவி.. கணவர் கைது!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

ஜெ.அன்பரசன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28) என்பவரும், சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் (28) என்பவரும் நான்காண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அரவிந்த் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். ஒருகட்டத்தில், ‘உனக்கு எதற்காக நான் சோறு போட வேண்டும்? நீ ஒரு அனாதை’ எனக் கூறி மனைவியை அவர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி அரவிந்த் குமார் திருமண நிகழ்ச்சிக்கு விக்கிரவாண்டி சென்று விட்டு மாலை வீடு வந்த போது அவரது மனைவி ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்து அவரது பெற்றோரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட ஐஸ்வர்யா, “எனது மரணத்திற்கு எனது கணவர் மட்டுமே காரணம். என் ஈமச் சடங்கிற்கு அவர் வரக்கூடாது. நீ திருந்தி நல்லா இரு” எனவும் கூறி வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரவிந்த்குமார்

இந்த நிலையில் நேற்று மாலை ஐஸ்வர்யாவின் கணவரான அரவிந்த் குமாரை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யாவின் கணவர் அரவிந்த் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.