தமிழ்நாடு

`அது உண்மையான திருமணமல்ல’- குழந்தை திருமண வழக்கில் சிதம்பரம் தீட்சிதர்கள் புதிய மனு!

`அது உண்மையான திருமணமல்ல’- குழந்தை திருமண வழக்கில் சிதம்பரம் தீட்சிதர்கள் புதிய மனு!

webteam

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2021ம் ஆண்டு, 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, தீட்சிதர்களுக்கு எதிராக, கடலூர் அனைத்து மகளிர் போலீஸில் மாவட்ட பெண்கள் நல ஊரக அலுவலரான தவமணி என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல தீட்சிதர்களை கைது செய்தனர்.



இந்நிலையில் குழந்தை திருமணம் ஏதும் நடத்தப்படவில்லை எனவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களான தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தீட்சிதர் குல வழக்கப்படி நடராஜர்-சிவகாமி அம்மன் சன்னதியில் திருக்கல்யாணம் நடைபெறும் எனவும், பல குடும்பத்தினர் இந்த திருக்கல்யாண வைபவத்தை நடத்தியுள்ளதாகவும், அவை உண்மையான திருமணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்களுக்கும், நடராஜர் கோவிலுக்கும் உள்ள நன்மதிப்பை கெடுக்கும் விதமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்ததால் மனதளவில் பாதிக்கப்பட்ட தனது மகள், பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து வருவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.