போலி மருத்துவரால் இளைஞர் மரணம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சிதம்பரம்: போலி மருத்துவர் கொடுத்த சிகிச்சை.. மயங்கி விழுந்து உயிரிழந்த 22 வயது இளைஞர்

சிதம்பரத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட இளைஞருக்கு போலி மருத்துவர் அளித்த சிகிச்சை.. இளைஞர் உயிரிழந்த சோகம்!

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் கவிமணி (22). இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிதம்பரம் நகரில் உள்ள மந்தகரை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சரவணன் என்கிற தளபதி ராஜா (50) என்பவர் பணியில் இருந்துள்ளார். முறையாக மருத்துவம் பயிலாத சரவணன், கவிமணிக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற வழியிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார் கவிமணி. அங்கு அவருடன் வந்தவர்கள் கவிமணியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கவிமணியின் தாயார் கவிதா இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டரான சரவணன் என்ற தளபதி ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.