தமிழ்நாடு

சென்னையில் விர்ரென்று அதிகரித்த ஆட்டு இறைச்சியின் விலை!! ‘ஒரு கிலோ ரூ1100’

சென்னையில் விர்ரென்று அதிகரித்த ஆட்டு இறைச்சியின் விலை!! ‘ஒரு கிலோ ரூ1100’

webteam

சென்னையில் 1 கிலோ ஆட்டு இறைச்சி 1100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழி இறைச்சியும் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் இறைச்சிக்காக ஆடுகள் கொண்டு வரப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், வெளிமாநிலங்களில்‌ ‌‌இருந்து இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு வருவது வெகுவாக குறைந்துள்ளது.‌

வரத்து குறைவு உள்ளிட்ட ‌‌கா‌‌ரணங்களால், ஆட்டு இறைச்சி விலை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஊரடங்கிற்கு முன், சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 600 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பின்னர் நாள்தோறும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். இதில் சமூக இடைவெளியை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை என்பது தனிக்கதை.

நாளுக்கு நாள் உயர்ந்து வந்த ஆட்டு இறைச்சியின் விலை தற்போது 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இரண்டு வாரமாக ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு சற்றே சுமையை கூட்டியுள்ளது.